விழுப்புரம் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ய வந்த ஒரு பெண் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மகாதேவி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மனைவி விஜயா(வயது 37) நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) 100 நாள் வேலைக்கு சென்றார். 100 நாள் வேலை என்று சுருக்கமாக அறியப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யவேண்டுமென்றால் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது.

எனவே, பணித் தளத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத தொழிலாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார்கள் சுகாதாரப் பணியாளர்கள். மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இந்தப் பணியை மேற்கொண்டனர். இதில் அங்கு பணி செய்து கொண்டிருந்த விஜயாவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று காலை விஜயாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது‌. இதையடுத்து அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலுக்கு இணங்க முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் விஜயா. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார்‌ 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த மகாதேவி கிராம பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட காரணத்தால்தான் அவர் உயிரிழந்தார் எனக் கூறி செஞ்சி – சேத்துப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறகு அவர்களை காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் வளத்தி போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் இந்த பெண் உயிரிழப்பு தொடர்பாக காவல் துறையினர் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் (IPC 174) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு குறித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் பிபிசி தமிழ் பேசியது.