மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்று பிற்பகலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக, இந்த மசோதா தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர்,” எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமானால், நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம்,” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதன்போது எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது நீட் தேர்வு தொடர்பாக முவைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.
“அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று, ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்,” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். “நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் ,” என்றும் நேற்றைய அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.