கொரோனா ஊரடங்கு காலத்தில், சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய மலேசியாவாழ் தமிழர் ஒருவர், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால், மலேசியாவில் அவர் மூலமாக 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியதை அடுத்து, சிவகங்கையில் உள்ள அவரது குடும்ப உறவினர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூலை 13ம் தேதிவரை சிவகங்கையில் அந்த நபர் தங்கியிருந்தார். அவர் மலேசியாவுக்கு சென்ற பின்னர், முதல் முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் இரண்டாவது சோதனையில்தான் தொற்று இருப்பது உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கையில் இருந்து திரும்பிய ஒரு தனி நபர், மலேசியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதால், அவர் மூலம் பலருக்கு தொற்று பரவியதாகக் கூறி, மலேசியா அரசு ‘சிவகங்கை கிளஸ்ட்டர்’ என்ற பெயரில் அவர் மூலமாக தொற்றுக்கு ஆளானவர்களை அடையாளப்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதாவிடம் இது குறித்து பிபிசி பேசியது.

அப்போது, 57 வயதான அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என்று கூறிய அவர், ”மலேசியாவில் விதிகளை மீறி பொது இடங்களுக்கு சென்றாதால், அவர் மூலம் பலருக்கு கொரோனா பரவியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தோம். அவரது மனைவி, மகன், மகள் மற்றும் மாமனார் ஆகியோரை தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாதிரிகளை பெற்றுள்ளோம். முடிவுகள் வந்த பின்னரே முழுவிவரம் கிடைக்கும்,” என்றார். மலேசியாவில் உள்ள செய்தியாளர் சதீஷ் பார்த்திபனிடம் சிவகங்கை கிளஸ்ட்டர் விவகாரம் குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த நபர் மலேசியா அரசாங்கம் ஏற்பாடு செய்த சிறப்பு விமானம் மூலம் தமிழகத்தில் இருந்து நாடு திரும்பியதாக தெரிவித்தார். சிவகங்கை நபர் உணவகம் நடத்தி வந்ததால், அந்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் குடும்பத்தினர் , உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் என பலருக்கும் தொற்று பரவியுள்ளது என மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அவர் மூலமாக ஏற்பட்ட தொற்றானது கொரோனா வைரஸின் திரிபு என கருதப்படும் அதிக வீரியமுள்ள தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மலேசிய சுகாதார அமைச்சகம் கருதுகிறது. ஒரு தனி நபரிடம் இருந்து பலருக்கு தொற்று பரவும்போது (கொத்துக்கொத்தாக பாதிக்கப்படும்போது) அதை கிருமித் திரள் – அல்லது – கிருமிக்குழு – அல்லது கிருமிக்கொத்து (CLUSTER) என்று குறிப்பிடுகிறார்கள். இத்தகைய கிருமிக் கொத்துகளில் ஒன்றிரண்டு குழுக்கள் மட்டும் அதிவேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டிருக்கும். அவை ‘சூப்பர் ஸ்பிரெட்டர்’ (Super Spreader) எனக் குறிப்பிடப்படுகின்றன.

சிவகங்கை நபரிடம் இருந்து பிறருக்கு பரவியது கிளஸ்ட்டர் வகையா அல்லது சூப்பர் ஸ்பிரெட்டர் வகையான என உறுதியாகவில்லை. சிவகங்கை நபர் விதிகளை மீறியதால், அவருடன் தொடர்பில் இருந்த, அவர் வசித்த பகுதி என சுமார் 3,200க்கும் மேற்பட்டவர்களுக்குப் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுஎன்பர் தெரியவந்துள்ளது.

சிவகங்கை நபருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண வசதியாகவும், தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தவும் கெடா மாநிலத்தின் நான்கு பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர் சதீஷ் பார்த்திபன் தெரிவித்தார்.