சென்னை கேசவபிள்ளை பூங்கா பல அடுக்கு கட்டட விவகாரத்தில் ஐ.ஐ.டி நிபுணர் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் `மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதை விட தனக்குத்தானே லாபம் சம்பாதிப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணியாக இருந்துள்ளது,’ என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன். என்ன நடக்கிறது?

சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் எனப்படும் கேசவபிள்ளை பூங்காவில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 2016ஆம் ஆண்டு 1,920 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதற்காக ரூ.112 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்ததால், கொரோனா வார்டாகவும் இந்தக் கட்டடம் பயன்பட்டன. இந்த நிலையில், இந்த கட்டடங்கள் தொட்டாலே உதிரும் வண்ணம் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும், ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் எலக்ட்ரிக் ஷேவருக்கு கூட ஓராண்டு கியாரண்டி உள்ளதாகவும் கமல் விமர்சித்தார். இதையடுத்து, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்பட அதிகாரிகள் கே.பி.பார்க் அடுக்குமாடி கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் எழும்பூர் தொகுதி எம்.எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.