அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்தாலும் ஒரு ஏமாற்றம்.
அக்டோபர் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் (Retail Inflation) தொடர்பான விவரங்களை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.77% ஆக குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.41% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்திருந்தாலும், ரிசர்வ் வங்கியின் பணவீக்க வரம்பான 6% மேல் நீடித்து வருவது ஒரு பிரச்சினையாக உள்ளது. பணவீக்கத்தை 6% கீழ் குறைக்க ரிசர்வ் வங்கி முயற்சித்து வருகிறது.
அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 6% கீழ் குறையும் என கடந்த சனிக்கிழமை அன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அக்டோபரிலும் 6% மேல் பணவீக்கம் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
மொத்த விலை பணவீக்கம்
மொத்த விலை பணவீக்கமும் அக்டோபர் மாதம் குறைந்துள்ளது. அக்டோபரில் மொத்த விலை பணவீக்கம் (Wholesale Price Inflation) 8.39% ஆக குறைந்துள்ளது. இது 19 மாத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 12.41% ஆக உச்சத்தை தொட்டது. செப்டம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 10.79% ஆக இருந்தது. இப்படி கடந்த 18 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே இருந்தது.
சரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அக்டோபர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. கனிம எண்ணெய், ஜவுளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.