நீல நிற ஆதார் அட்டை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த அட்டை யாருக்கு வழங்கப்படும் தெரியுமா? முழு விவரம் இதோ..
ஆதார் அட்டை என்பது இந்தியர்களின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். தனிநபர்களின் பெயர், பிறந்த தேதி, கைரேகை பதிவு, முகவரி, தொடர்பு விவரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் இதில் உள்ளன. ஆதார் அட்டையில் தனித்துவமான 12 இலக்க எண் உள்ளது. இது ஆதார் அல்லது UID எண் என்றும் அழைக்கப்படுகிறது. இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; பணம் தொடர்பான விஷயங்கள் மற்றும் பல நிர்வாக, அரசாங்க நோக்கங்களுக்கு ஆதார் தேவைப்படுகிறது. வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு, சிம் கார்டு போன்ற பல்வேறு விஷங்களில் அதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
புளூ ஆதார் கார்டு!
பிறந்த குழந்தைகளுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வசதி இல்லை. 2018ஆம் ஆண்டில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. இது ‘குழந்தை ஆதார் அட்டை’ என்றும் ’நீல ஆதார் அட்டை’
என்றும் அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் இருக்கும். இது குழந்தைகளுக்காக மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
என்ன வித்தியாசம்?
நீல நிற ஆதார் அட்டை பெரியவர்களுக்கு வழங்கப்படும் அசல் அட்டைகளில் இருந்து சற்று வித்தியாசமானது. இந்த ஆதார் அட்டைகளில் குழந்தையின் கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேன் தேவையில்லை. குழந்தையின் ஆதார் அட்டையை சரிபார்க்க, பெற்றோர்களில் ஒருவர் அவர்களின் அசல் ஆதார் அட்டை மற்றும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
அப்டேட் அவசியம்!
குழந்தைகளுக்கான ஆதார் அட்டையிலும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் இருக்கும். இருப்பினும், குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது இந்த ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் அது செல்லாததாகிவிடும். தற்போதுள்ள ஆதார் அட்டையில் உள்ள ஐந்து வயது குழந்தையின் புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பெற்றோர்கள் புதுப்பிக்க வேண்டும்.
கட்டணம் கிடையாது!
குழந்தைகளின் ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே. இருப்பினும், பெற்றோர்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் செல்லுபடி காலத்தை நீட்டிக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், குழந்தைக்கு ஐந்து வயது ஆன பிறகும் குழந்தையின் ஆதார் அட்டையை செல்லுபடியாகும் அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளின் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பதற்கு அரசு எந்தக் கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.
தேவையான ஆவணங்கள்!
குழந்தைகளுக்கான நீல ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, பெற்றோர்கள் சில ஆவணங்களை சேவை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களுக்கான அசல் மற்றும் நகல் ஆகிய இரண்டையும் வைத்திருக்க வேண்டும். நகலை சமர்ப்பிக்க வேண்டும். அசலை அவர்களிடம் காண்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை, முகவரிச் சான்று மற்றும் பள்ளி அடையாள எண் (குழந்தை பள்ளிப் படிப்பு படித்தால்).
ஆன்லைன் கிடையாது!
நீல ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அருகிலுள்ள ஆதார் மையத்தை அவர்கள் சரிபார்க்கலாம். அதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலையும் அவர்கள் சரிபார்க்கலாம். ஆதார் அட்டைப் பதிவு செயல்முறையைத் தொடர்வதற்கு முன், தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.