செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ:

ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய்.

மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அந்த இனிப்பைத் தொடாமல் இருந்தால் இரண்டு மார்ஷ்மெலோ தருவதாகச் சொல்வார்கள். எவ்வளவு குழந்தைகளால் ஐந்து நிமிடம் பொறுமையாக இருக்க முடியும் என்று பார்த்தார்கள்.

அப்படி தாமதமாக இனிப்பைச் சாப்பிடத் தயாராக இருந்த குழந்தைகள் பிற்காலத்தில் சிறப்பாக இருந்தார்கள்.

இப்போது ஒரு பொருளை வாங்க வேண்டுமென்பது, இது போன்ற ஒரு ஆசைதான். அந்த ஆசையை, விருப்பத்தை தள்ளிப்போட முடிந்தால் சிறப்பானதாக இருக்கும். ஒரு டிவியை 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டு, 2 ஆண்டுகள் தவணை கட்ட தயாராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப் பதிலாக, ஒரு ஆண்டில் அதற்கான பணத்தை சேமித்து, பிறகு டிவி வாங்குங்கள். எந்த கடன் தொல்லையும் இல்லாமல், சிறப்பாக அந்த டிவியை அனுபவிக்கலாம். வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு இருக்கும்.

1991க்கு முன்பாக பெரும்பாலானவர்கள் இப்படித்தான் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் இந்த நுகர்வுப் போக்கு வந்தது. அது தவறல்ல, ஆனால், பணத்தை சேர்த்து வைத்து வாங்குவது நல்லது.