கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா?

பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கூறும் ஆலோசனைகள்: உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான் செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது.

ரூபாய் நோட்டுகள் என்பவை வெறும் காகிதங்கள். ஆனால், அவற்றுக்கு மதிப்பு எப்படி வருகிறதென்றால், அரசு என்ற அமைப்பின் மீது உள்ள நம்பிக்கையால்தான் வருகிறது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக ரிசர்வ் வங்கியில் தங்கம் இருக்கிறது என பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். ஆனால், அப்படி ஏதும் கிடையாது.

நாடுகள் தங்கள் விருப்பம்போல நோட்டுகளை அடிக்க ஆரம்பித்துவிட்டன. அமெரிக்காவிலும் அதுதான் நடக்கிறது. இந்த நிலையில்தான், சிலர் ஒன்று சேர்ந்து, கிரிப்டோ கரன்சியை உருவாக்கினர். நாடுகள் எந்த அடிப்படையான ஆதாரமும் இல்லாமல் பொறுப்பற்ற வகையில் நோட்டுகளை அடித்துத் தள்ளுவதால் அதற்கு மதிப்பில்லாமல் போவதாகக் கூறி இந்த செலாவணியை உருவாக்கினார்கள். இதற்கு பிளாக் செயின் என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கிரிப்டோகரன்சியில் மிக முக்கியமான விஷயம், அது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும். புதிய கிரிப்டோகரன்சிகளை டேட்டா மைனிங் செய்து எடுப்பது செல்லச்செல்ல கடினமாகிக்கொண்டே போகும். சென்னையில் ஒரு யூ டியூப் சேனலில் பணியாற்றியவர்கள், அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் மிக விலை உயர்ந்த சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களை வாங்கி, ஒரு பிட்காயினை மைனிங் செய்துவிட்டார்கள்.