தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது.
ஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான “இலக்குகளை” அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது.
டெக்சாஸ் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய தளங்களை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது.
புதிய ரேடார் திறன், விண்வெளியை “ஆபத்துகள் அற்றதாகவும், பாதுகாப்பானதாகவும், ” மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விண்வெளியில் நெரிசல், போட்டி மற்றும் ஆயுதக்குவிப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இம்முயற்சி நடக்கிறது.
ரஷ்யாவும் சீனாவும் செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தப்பயன்படும் ஆயுதங்களை உருவாக்கி வருவதாக, அமெரிக்காவும், பிரிட்டனும் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 10 அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டன.