முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
மாரியப்பன் தங்கவேலுவுக்குராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை – தினமணி
மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மாரியப்பன், இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய 5 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சகத்தைச் சோ்ந்த 12 போ் கொண்ட தோ்வுக் குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதற்காக மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த பேட்டிங்கிற்காக ரோஹித் சர்மாவிற்கும் 2018 காமென்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றதற்காக மல்யுத்த வீர ர் வினேஷ் போகட்டுக்கும் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு ஒரே நேரத்தில் 5 போ் பெயா் பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையாகும்.
அதே போல, 29 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சா்மா, ஹாக்கி வீராங்கனை தீபிகா தாக்குர், கபடி வீரர் தீபக் ஹூடா, ஆகியோருக்கு அா்ஜுனா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் 124 என்கவுண்ட்டர்கள்- தினத் தந்தி
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 124 ரெளவுகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர் என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 42 மாதங்களில் மட்டும் 124 பேரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 14 பேரும், முசாபர் நகரில் 11 பேரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இது வரை என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவர்களில் 47 பேர் முஸ்லிம்கள், 19 இந்துக்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்கிறது என உத்தரப்பிரதேச காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும் காவல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதி, மதத்தின் அடிப்படையில் எந்தவித பாகுபாடும் காட்டாமல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அயோத்தி மசூதி கட்ட ஒதுக்கிய 5 ஏக்கரில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சின்னமாக மசூதி – இந்து தமிழ் திசை
அயோத்தி பாபர் மசூதி – ராமர் கோயில் நிலத்தகராறு வழக்கின் தீர்ப்பில் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சின்னமாக மசூதி அமைக்கப்படும் என இந்தோ இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை நம்பிக்கை தெரிவித்துள்ளது என இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி குறிப்பிடுகிறது. மசூதியுடன் சேர்ந்து நூலகம், மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளன.
அயோத்தியில் தற்போது ராமர் கோயில் அமைக்கப்படவுள்ள இடத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனிப்பூர் கிராமத்தில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மசூதி கட்ட சன்னி முஸ்லிம் வாரியம் சார்பில் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (ஐஐசிஎப்) உருவாக்கப்பட்டது.
ஐஐசிஎப் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அத்தர் உசைன் கூறும்போது, “அயோத்தி நிலப் பிரச்சினையால் நாடு முழுவதிலும் இந்து-முஸ்லிம் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருந்தது.
தற்போது அதன் மீதான தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றதால் இங்கு கோயிலும், மசூதியும்அமைகின்றன. பாபர் மசூதிக்கு ஈடாகக் கட்டப்படும் புதிய மசூதி உள்ளிட்டவை, நாட்டின் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக அமையும். ஆங்கிலேயரை எதிர்க்க இரு தரப்பினரும் ஒன்றாக இணைந்தது போன்ற நிலை இனி உருவாகும்” என்றார்.
இந்த 5 ஏக்கர் நிலத்தில்அமையவுள்ள கட்டிடங்களில் மசூதி மட்டுமே முஸ்லிம்களுக் கானதாக இருக்கும். மற்றவை அயோத்தி வரும் ராம பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.