தொழிலதிபரும், மஹிந்த்ரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்த்ராவை (Anand Mahindra) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் (Bill gates) இன்று நேரில் சந்தித்தார்.
ஆனந்த் மஹிந்த்ரா பல்வேறு தொழில்களில் பயங்கர பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஆனந்த் மஹிந்த்ரா தன்னை பில் கேட்ஸ் நேரில் வந்து சந்தித்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில், “பில் கேட்ஸை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. எங்கள் இரு குழுக்களின் முழு உரையாடலும் ஐடி பற்றியோ, தொழில் பற்றியோ இல்லை. சமூக தாக்கத்தை எப்படி பெருக்குவது என்பது பற்றியே இரு தரப்பும் பேசினோம். (இதில் எனக்கு ஒரு லாபமும் இருக்கிறது. அவரின் புத்தகம் ஆட்டோகிராப் உடன் இலவசமாக கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்த்ராவுக்கு பில் கேட்ஸ் பரிசாக அளித்துள்ள அவரது புத்தகத்தில், “ஆனந்துக்கு, எனது வகுப்பு தோழனுக்கு வாழ்த்துகள்” என்று எழுதி ஆட்டோகிராப் இட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களோ, பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் வகுப்பு தோழர்களா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பினார்கள். இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் ஒரு காலத்தில் கல்லூரி வகுப்பு தோழர்கள்தான்.
1970களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பில் கேட்ஸும், ஆனந்த் மகிந்த்ராவும் ஒரே வகுப்பில் படித்தனர். எனினும், இரண்டே ஆண்டுகளில் பில் கேட்ஸ் தனது படிப்பை நிறுத்திக்கொண்டார். 1977ஆம் ஆண்டில் ஆனந்த் மஹிந்த்ரா ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.
2005ஆம் ஆண்டில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மாநாட்டில் ஆனந்த் மஹிந்த்ரா பங்கேற்றார். மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மஹிந்த்ரா குழுமமும் இணைந்து பல்வேறு கூட்டு முயற்சிகளையும் நடத்தியிருக்கின்றன.
கொரோனா பாதிப்புக்கு பின் முதல்முறையாக பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸையும் பில் கேட்ஸ் நேரில் சந்தித்து பேசினார். மேலும், தனது கல்லூரி கால நண்பர் ஆனந்த் மஹிந்த்ராவையும் சந்தித்து புத்தகத்தை பரிசாக வழங்கினார்.