ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வாராந்தோறும் புதன்கிழமை, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதும் வழக்கம். அத்துடன் அரச ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, போனஸ் உள்ளிட்டவற்றுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தி்ல் முக்கியமானதொரு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரயிவ்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி அவர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் (அடிப்படை ஊதியம்) போனஸாக வழங்கப்பட உள்ளது.

அதிகபட்சம் 17,951 ரூபாய் தீபாவளி போனஸாக ரயில்வே ஊழியர்கள் பெறுவார்கள் எனவும், இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 11.27 லட்சம் ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மொத்தம் 1,832 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டர் விவையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் விதத்தில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் அளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.