கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. பெரியநாயக்கன்பாளையம் சரகத்தில் உள்ள தோலம்பாளையம் வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

அந்த யானையின் தந்தங்களைப் பார்த்த குஞ்சூர்பதி கார்த்திக் குமாருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. யானையின் தந்தங்களை உருவி எடுத்து காட்டுப் பகுதியில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதனை விற்பதற்காக ஆள் தேடி அலைந்துள்ளனர். ஒரு வழியாக மான் என்கிற தாமோதரன் என்பவர் மூலம் தந்தங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். அவற்றை கேரளாவில் விற்பதற்காக தங்கராஜ் என்பவரை அணுகியுள்ளனர். அவர், `நல்ல விலை கிடைக்கும்’ எனக் கூறியதால் தந்தங்களை அங்கேயே மறைத்து வைத்துவிட்டனர். பின்னர், அந்த தந்தங்கள் காணாமல் போகவே இவர்களுக்குள் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை காவல்துறை விசாரிக்க வந்தபோதுதான், யானை தந்த விவகாரம் வெளியில் வந்தது.

தொடர்ந்து வனத்துறையினரின் விசாரணையில் கேரளாவுக்கு தந்தங்களை தங்கராஜ் கொண்டு சென்ற தகவல் கிடைத்துள்ளது. கொச்சினில் தங்கராஜை பிடித்து விசாரித்தபோது கிணற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 அடி நீளம் கொண்ட 5 கிலோ எடையுள்ள தந்தங்கள் சிக்கியுள்ளன.

இதே வரிசையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 11 கிலோ எடையுள்ள ஒரு ஜோடி தந்தங்களை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் இந்தக் கும்பல் தந்தத்தை விற்பதற்கான பணிகளில் இறங்கியபோது வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர். இதனால் தங்களின் இருப்பிடத்தை சேலத்துக்கு மாற்றினர். இருப்பினும், பின்தொடர்ந்து சென்று ஐந்து பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர். “தந்தங்களை வர்த்தகம் செய்பவர்களில் 2 வகையான குற்றவாளிகள் உள்ளனர். உலகத் தேவையை அறிந்து தந்தத்தின் மதிப்பைக் கணக்கிட்டு வேட்டை நடப்பது. அடுத்ததாக, இறந்து கிடந்த யானையின் தந்தத்தை மறைத்து வைத்து விற்பது எனச் செயல்படும் சிறு கும்பல்.