பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் ஆதார் கார்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியர்கள் அனைவருக்குமே ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆதார் கார்டு இல்லாமல் இனி தண்ணீர் கூட கிடைக்காது என்ற நிலை விரைவில் வந்துவிடும் போல. அந்த அளவுக்கு ஆதார் கார்டு படிப்படியாக ஒவ்வொரு விஷயத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் வரை வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆதார் கார்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.

பென்சன் வாங்குவோருக்கும் ஆதார் கார்டு பெரும் உதவியாக உள்ளது. பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆயுள் சான்றிதழை (life certificate) சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையிலும் சமர்ப்பிக்கலாம். முகத்தை ஸ்கேன் செய்வது மூலமாக டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் ஆயுள் சமர்ப்பிக்கும் முறையில் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. எனவே, பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் ஆதார் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆதார் அமைப்பு (UIDAI) தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச மூத்த குடிமக்கள் தினமான இன்று (அக்டோபர் 1) இந்தப் பதிவை ஆதார் அமைப்பு பகிர்ந்துள்ளது. டிஜிட்டல் முறையில் ஆதார் கார்டைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்து வீட்டில் அமர்ந்துகொண்டே வீட்டு வாசலில் பென்சன் வாங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.