அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

`அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை விட இந்த வழக்கு சற்று மாறுபட்டது. இதில் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்படவே வாய்ப்பு அதிகம்,’ என்கிறார் `அறப்போர்’ இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இலக்காக வைத்து இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தவிர, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (17 ஆம் தேதி) லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கரோடு சேர்த்து அவரது மனைவி ரம்யாவின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை குறித்து, `அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கரும் அவரின் மனைவி ரம்யாவும் சொத்துக் குவித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 வரையில் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில் இந்த சொத்துகளை குவித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. இதில், 2016 ஆம் ஆண்டு 6 கோடி ரூபாய்க்கான சொத்துகளை அவர் வைத்திருந்ததாகவும் அந்தச் சொத்துகள் 57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டுள்ளது,” என்கிறார்.