கொங்கு மண்டல அருந்ததியர் சமூகத்தினரை முன்வைத்து பா.ஜ.க நடத்தி வரும் அரசியல் ஆட்டத்தால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

`மேற்கு மண்டலத்தில் 5 மக்களவை தொகுதிகளை இலக்காக வைத்து பா.ஜ.க இயங்கி வருகிறது. அ.தி.மு.க கையாளும் அதே திட்டத்தை முருகன் கையில் எடுத்திருக்கிறார்,’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேற்கு மண்டலத்தில் என்ன நடக்கிறது?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதன் காரணமாக, மத்திய அரசில் இணை அமைச்சராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில், `மக்கள் ஆசி யாத்திரை’ என்ற ஒன்றை முருகன் முன்னெடுத்தார்.

கடந்த 16 ஆம் தேதி கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த யாத்திரையை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் என 169 இடங்களில் நடத்தி, அங்குள்ள மக்களை சந்தித்து பயணத்தை நிறைவு செய்திருக்கிறார் முருகன்.

மூன்று நாட்கள் நீடித்த இந்தப் பயணத்தில், தனது சொந்த சமூகமான அருந்ததிய மக்களிடம் ஆசி பெறுவதை முக்கிய நோக்கமாக முருகன் வைத்திருந்தார். இதையொட்டி, யாத்திரை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக முப்பதுக்கும் மேற்பட்ட சாதி அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்று திரட்டி, `எந்தவகையில் யாத்திரையை சிறப்பாக நடத்துவது?’ என விவாதிக்கப்பட்டது. அதற்கேற்ப, கோவையில் முருகனுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. கோவையில் அருந்ததியர் மக்கள் அடர்த்தியாக வாழும் காமராஜபுரம் பகுதியில் உள்ள அம்மக்களின் கால்களில் விழுந்து முருகன் ஆசிபெற்றார். இதனால் அப்பகுதியில் உள்ள பா.ஜ.கவினர் நெகிழ்ந்து போனார்கள்.